காசா அகதிகள் முகாம் மீது குண்டுவீச்சு - 2 சிறுவர்கள் உட்பட 9 பேரை கொலை செய்த இஸ்ரேல்

இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாகப் பலியானான்.
காசா
காசா
Published on

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்

நேற்று கசா நகரில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கசாவின் ஜெய்துன் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாகப் பலியானான்.

கசா நகரின் பிற பகுதிகளில் நடத்தப்பட்ட இரு வேறு தனித்தனி வான்வழித் தாக்குதல்களில் மேலும் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அகதிகள் முகாம் மீது குண்டுவீச்சு

தெற்கு கசாவிலுள்ள கான் யூனிஸ் நகரின் அல் மாவசி பகுதியில், போரினால் இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த தற்காலிக கூடாரங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கின.

இதில் 10 வயது சிறுவன் ஒருவன் உள்பட ஒரே இடத்தில் 4 பாலஸ்தீனர்கள் உடல் சிதறிப் பலியாகினர்.

போர் நிறுத்த மீறல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைத்துள்ள சர்வதேச அமைதி வாரியத்தின் கசாவுக்கான சிறப்பு அமைதித் தூதரான நிக்கோலே ம்லாடனோவ், "போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய இருதரப்புமே தொடர்ச்சியாக மீறி வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் அமலுக்கு வந்த இந்த ஒன்பது மாத காலத்தில் மட்டும், கசாவில் பெரும்பாலான பொதுமக்கள் உட்பட 1,080க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், இக்காலகட்டத்தில் 4 இஸ்ரேலிய வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக இருதரப்பு அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023 அக்டோபர் முதல் காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72000த்தை கடந்துள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். காசாவுக்குள் செல்லும் உணவு மற்றும் உதவிப் பொருட்களை தடுத்து நிறுத்தி மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தை இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ளது.

இது காசாவில் இன அழிப்பு செய்வதற்கான இஸ்ரேலின் திட்டமிட்ட செயல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சட்டையுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com