

உக்ரைனின் டிரோன் தாக்குதலால் அசோவ் கடலில் ரஷியாவின் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.
அசோவ் கடல் என்பது ரஷியா மற்றும் உக்ரைன் எல்லைகளுக்கு நடுவே அமைந்துள்ள, கெர்ச் நீரிணை வழியாகக் கருங்கடலுடன் இணையும் ஒரு கடலாகும்.
இந்நிலையில் உக்ரைனின் தொடர் டிரோன் தாக்குதல்களால் டான் அசோவ் கால்வாய் மற்றும் கெர்ச் நீரிணை வழியாக செல்லும் ரஷ்யக் கப்பல்களின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் தரவுகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த 9 நாட்களில் மட்டும் அசோவ் கடல் பகுதியில் ரஷியாவுக்கு சொந்தமான 116 கப்பல்களை உக்ரைனிய டிரோன்கள் குறிவைத்து தாக்கியுள்ளதாக உக்ரைனின் டிரோன் படைப்பிரிவுத் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் போர்க்கப்பல்கள் மட்டுமின்றி, சரக்குக் கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.
ரஷியாவின் எண்ணெய், கோதுமை, சூரியகாந்தி எண்ணெய், எஃகு ஏற்றுமதி இந்த அசோவ் கடல் துறைமுகங்கள் வழியாகவே நடக்கிறது.
குறிப்பாக ரஷியா தனது நாட்டின் ஒட்டுமொத்த கோதுமை ஏற்றுமதியில் சுமார் 25 சதவீதத்தை இதன் வழியாகவே உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது.
சர்வதேச கோதுமைச் சந்தையில் 20 சதவீத பங்கைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளராக ரஷியா திகழ்கிறது.
தற்போதைய கப்பல் போக்குவரத்து முடக்கத்தால் சர்வதேச சந்தையில் கோதுமைக்கான வர்த்தக விலை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் முற்றுகை நீடித்தால் ரஷியாவுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என கணிக்கப்படுகிறது.
மாற்றுப் பாதையாக கருங்கடல் துறைமுகங்களை ரஷியா பயன்படுத்த நினைத்தாலும், அறுவடைக் கால ஏற்றுமதியை தாங்கும் கொள்ளளவு அந்தத் துறைமுகங்களுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது.
உக்ரைன் தற்போது ரஷியாவின் விநியோகச் சங்கிலியை உடைக்கும் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தை ரஷியாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து தனிமைப்படுத்துவதும், அசோவ் கடல் வழியாக நடக்கும் ரஷியாவின் வர்த்தக ஏற்றுமதியை முடக்கி அதன் பொருளாதாரத்தை நலிவடைய செய்வதும் தான் உக்ரைனின் முக்கிய நோக்கம்
அசோவ் கடல் பாதையை 2003 ஒப்பந்தப்படி ரஷியா - உக்ரைன் நாடுகள் பகிர்ந்து வந்தன.
ஆனால், 2014 இல் கிரிமியாவை ரஷியா கைப்பற்றியதில் இருந்து சர்ச்சை எழுந்தது. 2022 முழு அளவிலான போருக்குப் பின் இதனை ரஷியாவுக்கு சொந்தமான கடல் என அதிபர் புதின் வெளிப்படையாக அறிவித்தார்.