

திருப்பனந்தாள்:
கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரையை சேர்ந்தவர் நடராஜன் மகள் நதியா (வயது 22). அரியலூர் மாவட்டம் வடவாற்றை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர்கள் 2 பேரும் திருப்பனந்தாளில் உள்ள பள்ளி, கல்லூரியில் படித்தனர். இதில் அருண்குமார் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே தற்போது ஊரடங்கு காரணமாக அருண்குமார் திருப்பூரில் இருந்து வந்தார். இதையடுத்து அவரும், நதியாவும் கடந்த 19-ம் தேதி அணைக்கரை வில்லியாண்டவர் கோவில் முன் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு கேட்டு திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் கவிதா முன்னிலையில் நதியாவை, காவலர் ஜெயப்பிரியா சாதிப்பெயரை கூறி திட்டி காலால் மிதித்ததாக கூறப்படுகிறது. மேலும் தாலியை கழட்டுமாறு கூறினார். பின்னர் அவரே தாலியை கழற்றினார்.
இந்த தாக்குதலில் நதியா மயங்கி விழுந்தார். தகவல் அறிந்ததும் நீலப்புலிகள் இயக்க தலைவர் புரட்சிமணி, டி.எஸ்.பியிடம் முறையிட்டதையடுத்து அருண்குமார், நதியாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன் பின்னர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் காதல் தம்பதி ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நதியா, நான் அருண்குமாரோடு தான் வாழ்வேன் என கூறியதால் அவரை கணவரோடு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தன்னையும், மனைவி நதியாவையும் சாதிப்பெயரை கூறி தாக்கிய காவலர் ஜெயப்பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திருப்பனந்தாள் போலீசில் அருண்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.