

புதுடெல்லி:
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய லோக்தள கட்சியின் எம்.பி.யான துஷ்யந்த் சவுதாலா பாராளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘புதிதாக திருத்தம் செய்யப்பட இருக்கும் மோட்டார் வாகன சட்டத்தின்படி டிராக்டரை வேளாண் வாகன பட்டியலில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி செய்யப்பட்டால் டிராக்டரின் விலை அதிகரிக்கும். அதோடு டிராக்டர்களுக்கான சுங்கச்சாவடி கட்டணமும் அதிகரிக்கப்படும். இது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதில் மாற்றம் செய்யப்பட வேண்டும்’, என்றார்.
இந்நிலையில் இன்று மக்களவையில் டிராக்டர் பிரச்சனை குறித்து துஷ்யந்த் சவுதாலா பேசினார். நேரமில்லா நேரத்தின்போது இந்த பிரச்சனையை எழுப்பிய அவர், ‘டிராக்டர்கள் மீது வரிகள் விதிக்கப்பட உள்ளது. 10 ஆண்டு பழமையான டிராக்டர்களை விவசாயிகள் பயன்படுத்த முடியாமல் போகலாம். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த அறிவிக்கையை அரசு திரும்ப பெறவேண்டும்’ என வலியுறுத்தினார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ் பேசும்போது, தங்கள் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்புப் படையினர் மூலம் 'இசட் பிளஸ்' பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தினார். லாலு பிரசாத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்கும்படி கேட்டுக்கொண்டார்.