

சென்னை:
மேற்கு மாம்பலம் கணபதி தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த 15 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதே பகுதியில் அவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளது.
நேற்று இரவு இவர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது மர்ம நபர்கள் அவரது அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் மேஜையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இன்று காலையில் அலுவலகத்தை திறக்க வந்த ரமேஷ் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுபற்றி ரமேஷ் அசோக்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ரமேசுக்கு நன்கு தெரிந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை நடந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து துரைசாமி சுரங்கப்பாதை வரை ஓடி நின்றுவிட்டது.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.