வடகொரிய வர்த்தக கப்பல்கள் மற்ற நாடுகளின் துறைமுகத்துக்கு செல்ல ஐ.நா. தடை

வடகொரியாவின் 4 வர்த்தக கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.
வடகொரிய வர்த்தக கப்பல்கள் மற்ற நாடுகளின் துறைமுகத்துக்கு செல்ல ஐ.நா. தடை
Published on

நியூயார்க்:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பல்வேறு பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது. வடகொரியா மீது மிகக் கடுமையான தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வற்புறுத்தியது.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் வடகொரியா மீது புதிய தடை விதித்தது. அதன்படி அந்த நாட்டின் பெட்ரெல் 8, ஹாவோ பான் 6, டோங் சான் 2, ஜி சுன் ஆகிய 4 வர்த்தக கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் வடகொரியாவுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்துவரும் சீனா உட்பட எந்த நாடும் தங்கள் துறைமுகங்களில் இந்த 4 கப்பல்களையும் நிறுத்த அனுமதிக்க இயலாது.

ஐ.நா.வின் விதிமுறை மீறியதற்காக குறிப்பிட்ட ஒரு நாட்டின் கப்பல்களை உலக நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஹூயூஜ் கிரிபித்ஸ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com