

லண்டன்:
பிரிட்டனில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020ல் முடிவடைகிறது. ஆனால், பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்த திட்டமிட்டார் பிரதமர் தெரசா மே. அதன்படி, ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது.
நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதுதான் ஒரே வழி என்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறிய அவர், பொதுத் தேர்தலை ஜூன் 8-ம் தேதி நடத்த அனுமதிக்க கோரி பாராளுமன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றினார். இதையடுத்து தேர்தல் பணிகளில் தலைவர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், லண்டனில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர். இதனால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி மற்றும் ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நிறுத்தப்பட்டன.
தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் தெரசா மே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலை எந்தவித இடையூறும் இன்றி பாதுகாப்பாக நடத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், “ஜனநாயக நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வன்முறைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இனி பயங்கரவாத தாக்குதல்களை சகித்துக்கொள்ள முடியாது. சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு நேரடி தொடர்பு இல்லாத போதும், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற தீமையான ஒற்றை சித்தாந்தத்தால் பிணைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளேன். நாளை முதல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும். திட்டமிட்டபடி 8-ம்தேதி தேர்தல் நடைபெறும்” என்றார்.