ரெயில்பெட்டி வாசலில் நின்ற வாலிபரை கம்பால் தாக்கி செல்போன் பறிப்பு

‘காக்கா முட்டை’ பட பாணியில் ரெயில்பெட்டி வாசலில் நின்ற வாலிபரை கம்பால் தாக்கி செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரெயில்பெட்டி வாசலில் நின்ற வாலிபரை கம்பால் தாக்கி செல்போன் பறிப்பு
Published on

திருவொற்றியூர்:

‘காக்காமுட்டை’ படத்தில் ரெயில் பெட்டியின் வாசலில் செல்போனுடன் நிற்கும் வாலிபரை ரெயில் தண்டவாளம் அருகே நிற்கும் 2 சிறுவர்கள் கம்பால் தாக்குவர்.

அப்போது கீழே விழும் செல்போனை அவர்கள் எடுத்து செல்வது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இதேபோன்ற சம்பவம் இன்று காலை திருவொற்றியூர் அருகே நடந்துள்ளது.

டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று காலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அண்ணாநகரை சேர்ந்த ஓவியர் கோகுல்ராமன் பயணம் செய்தார்.

திருவொற்றியூர் அருகே சடையாங்குப்பம் பாட்டை பகுதியில் ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில் பெட்டியின் வாசல் அருகே நின்றபடி கோகுல்ராமன் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் தண்டவாளம் அருகே நின்ற 3 பேர் திடீரென நீண்ட கம்பால் அவரது கையில் தாக்கினர். இதில் செல்போன் தவறி கீழே விழுந்தது. அதனை எடுத்துக் கொண்டு 3 பேரும் தப்பி ஓடினர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோகுலராமன் ரெயிலில் இருந்து கீழே குதித்து 3 பேரையும் விரட்டி சென்றார். அப்போது அங்கு நின்ற திருவொற்றியூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆசிப் பாஷாவும் அவர்களை விரட்டினார். இருவரும் சேர்ந்து செல்போனை பறித்து சென்ற 3 பேரையும் மடக்கி பிடித்து திருவொற்றியூர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த முகமது யூசுப், பட்டினத்தார் பகுதியை சேர்ந்த பாலா, மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்போனை பறித்த 3 பேரையும் விரட்டி பிடித்த கோகுல்ராமன், ஆசிப் பாஷாவையும் திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் பாராட்டினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com