

இன்றைய முக்கிய செய்திகள் வருமாறு:
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் சஸ்பெண்ட்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்பட, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு
மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது
மாநிலங்களவையில் இருந்து எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பியதால் நாள் முழுவதும் அவை முடங்கியது.
மகாராஷ்டிரா கட்டிட விபத்தில் 10 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்
மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நகரில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர். சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தை நெருங்கியது- இதுவரை 87,882 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இதுவரை 87,882 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43.96 லட்சமாக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்த மூன்று இடங்களில் பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
அல்கொய்தா பயங்கரவாதி வீட்டில் பாதாள அறை - என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
சமீபத்தில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதியின் வீட்டில் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் பதுக்குவதற்காக பாதாள அறை கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலை கடைகள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சிசிடிவி, ஜிபிஎஸ் உடன் மின்சாரம், சூரியசக்தியில் இயங்கும் 13 ஆட்டோ சேவையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
உலக அளவில் 3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.12 கோடியைத் தாண்டியுள்ளது. 9.65 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 2.28 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 60000-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
கொரோனாவால் ஏற்படும் நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனம்
கொரோனாவால் ஏற்படுகிற நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு முடிந்தாலும் 2 கோடி சிறுமிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் - மலாலா சொல்கிறார்
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு முடிவடைந்த பின்னரும் 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படலாம் என்று நோபல் பரிசு பெற்ற மலாலா கூறியுள்ளார்.
ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் - சச்சின் தெண்டுல்கர்
ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புகிறேன் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு-ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரண்டு அணிகளிலும் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இத்தாலி ஓபன் டென்னிஸ் : நடால் அதிர்ச்சி தோல்வி
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், 9 முறை சாம்பியனான ரபேல் நடால் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
மிஷ்கினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னணி இயக்குனர்கள்