3 பேரை வெட்டிக் கொலை செய்த விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை: திருவண்ணாமலை கோர்ட்டு உத்தரவு

சாத்தனூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகனை கொலை செய்த விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு உத்தரவிட்டது.
ராமசந்திரன்
ராமசந்திரன்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் நேருநகர் வீரபத்திரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 35), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந் தேதி அதிகாலையில் சாத்தனூர் கொள்ளைகொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணாமலை, அவரது மனைவி சென்னம்மாள் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் ஆகியோரை ராமசந்திரன் கத்தியால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு வழங்கினார். அதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்த குற்றத்திற்காக ராமசந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஆயுட்காலம் முழுவதும் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அர்ச்சனா ஆஜரானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com