திருப்பூரில் 200 வீடுகளில் வெள்ளம் புகுந்தது- அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

திருப்பூரில் பலத்த மழை காரணமாக 200 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தெற்கு தோட்டம் 3-வது வீதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.
திருப்பூர் தெற்கு தோட்டம் 3-வது வீதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.
Published on

திருப்பூரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது.

சுமார் ஒன்றரை மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் திருப்பூர் நகரில் பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் கிளை ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த கிளை ஆற்று வெள்ளம் திருப்பூர் - தாராபுரம் சாலையில் உள்ள தெற்கு தோட்டம், சங்கிலி பள்ளம், பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் ஊருக்குள் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு மொட்டை மாடிகளிலும், மேடான பகுதிகளிலும் தஞ்சம் புகுந்தனர். விடிய, விடிய தூங்காமல் குளிரில் தவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 7.30 மணியளவில் திருப்பூர் - தாராபுரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் - தாராபுரம் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மறியல் செய்தனர். அதிகாரிகள் வந்து வாக்குறுதி அளித்தால் தான் மறியலை கைவிடுவோம் என கூறினர்.

இந்த மறியல் காரணமாக திருப்பூர் - தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வோர், அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மறியல் குறித்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன், மாநகராட்சி உதவி கமி‌ஷனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கிளை ஆற்றில் அதிக தண்ணீர் வருவதை தடுத்து நொய்யல் ஆற்றில் வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பணிகள் உடனே தொடங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிளை ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை அடைத்து அதனை மாற்று வழி மூலம் நொய்யல் ஆற்றுக்கு திருப்பி விடும் பணி தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com