

சென்னை:
சென்னை தரமணி இந்திராகாந்தி தெருவில் வசித்து வருபவர் செந்தில். இவரது நண்பர் தினேஷ். மதுரையைச் சேர்ந்த இவர்கள் தரமணியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். செந்தில் பெங்களூர் சென்று விட்டு நேற்று கோயம்பேடு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் வேளச்சேரி விஜயநகரம் சென்றார்.
அங்கு நண்பர் தினேசை வரச்சொல்லி இருவரும் மோட்டார் சைக்கிளில் தரமணி நோக்கி சென்றனர்.
அப்போது சாலையில் ரூபாய் நோட்டு ஒன்று கிடந்துள்ளது. அதை அவர்கள் எடுத்தனர். அது ரூ.500 நோட்டு கட்டாகும். அதில் 179, 500 ரூபாய் நோட்டு (ரூ.89,500) இருந்துள்ளது.
அதனை எடுத்து செல்ல விரும்பாத ஐ.டி. ஊழியர்கள் வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். போலீசார் அந்த ரூபாய் நோட்டுகளை பிரித்து சோதனை செய்தபோது அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து வேளச்சேரி போலீசார் கள்ள நோட்டை வீசியது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ. 500 கள்ள நோட்டு அங்கு எப்படி வந்தது.
வேளச்சேரி தரமணி பகுதியில் கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ள நோட்டு கிடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்து அதன் மூலம் கும்பலை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
அந்த சாலையில் உள்ள கேமிராவின் பதிவுகளை எடுத்தால் ரூ.500 கள்ள நோட்டை வீசி சென்றது யார் என்று தெரிய வரும் என்பதால் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமராவை போலீசார் முதல் கட்ட ஆய்விற்கு பயன்படுத்துகின்றனர்.
இதுதவிர கடைகள், ஓட்டல், தொழில் நிறுவனங்களிலும் கள்ள நோட்டு புழக்கம் குறித்து விசாரித்து வருகின்றனர்.