

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் ஓரளவு தொகுதி பங்கீட்டு முடிந்த நிலையில், வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதனிடையே அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு சென்னை திரும்பினார்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.- பா.ஜ.க. தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்த பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருவதாகவும், அதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த இன்று சென்னை வர இருந்த பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லி சென்றுள்ள டி.டி.வி.தினகரன், அன்புமணியை அமித்ஷா இதுவரை சந்திக்காத நிலையில், பியூஷ் கோயலின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.