

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.
சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி முடிவாகி உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தை சேர்ந்த மக்களின் மனநிலையை அறிய மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் vox pops நடத்தப்பட்டது.
தி.மு.க. ஆட்சி நன்றாக உள்ளது. தமிழ்நாட்டிற்காக போராடுவது தி.மு.க. மட்டும் தான். திமுக வந்தால் நன்றாக இருக்கும்.
சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். பா.ஜ.க. வந்தால் மத மோதல்களை உருவாக்கி பிரச்சனையை ஏற்படுத்தி விடும். அதனால் திராவிட நாயகனுக்கு போடுவேன். தி.மு.க. திட்டங்கள் நன்றாக உள்ளது என்று ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
கொரோனா நேரத்தில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருந்தது. அம்மா இருந்தபோது சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது. அம்மாவுக்காக இரட்டை இலைக்கு போடுவேன் என்று ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
தி.மு.க. - அ.தி.மு.க. மாற்றி மாற்றி போட்டு விட்டோம். இந்த ஆட்சியில் நிலப்பிரச்சனை, பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக உள்ளது.
சட்டம் ஒழுங்கு சரியில்லை. படிப்பு தான் இலவசமாக கொடுக்க வேண்டும். படித்தவர்களுக்கு வேலை தான் தேவை. இலவச பஸ், பணம் தேவையில்லை அதனால் முன்னேற்றம் இல்லை.
புது வரவான விஜய்க்கு ஓட்டு போடுவோம். கில்லி படத்தில் இருந்து அவரை பிடிக்கும். ஆட்சி மாற்றம் வரட்டுமே. இளைஞர்கள் வரட்டும். அதனால் விஜய்க்கு ஓட்டு போடுவோம் என்று இளம் தலைமுறையினர், நடுத்தர மக்கள், முதியவர்கள் பலதரப்பட்ட மக்கள் த.வெ.க.விற்கு போடுவேன் என்று தெரிவித்தனர்.
யாருக்கு போடுவது என்று முடிவு செய்யவில்லை என்று ஒரு சிலரும், சீமான் இல்லை விஜய்க்கு போடுவேன் என்று ஒரு சிலரும் தெரிவித்தனர்.
மொத்தத்தில் ஆட்சி மாற்றம் வரட்டுமே... புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்போம் என்பது பெரும்பாலானவர்களின் மனநிலையாக உள்ளது.