தலைசுற்ற வைக்கும் Exit poll.. கணக்கு எங்கேயோ இடிக்குதே - என்ன தான் முடிவு? - ஒரு அலசல்

எல்லா தேர்தல்களிலும் கருத்து கணிப்புகள் வெளியாவது வழக்கம்தான். அதில் சில பலிக்கும். சில பலிக்காமல் போகும். எல்லா தேர்தல்களிலும் அதை பார்த்துதான் வருகிறோம்.
தலைசுற்ற வைக்கும் Exit poll.. கணக்கு எங்கேயோ இடிக்குதே - என்ன தான் முடிவு? - ஒரு அலசல்
Published on

பெட்டிக்குள் இருக்கும் ஓட்டு! யாருக்கு கொடுக்கும் வெற்றி? யாருக்கு வைக்கும் வேட்டு…?

-இது புரியாமல் தானே ஒரு வாரமாக பலர் தூக்கத்தை தொலைத்து கொண்டு இருக்கிறார்கள்.

கணக்கை எப்படி மாற்றி மாற்றி எழுதி பார்த்தாலும் எங்கோ இடிக்குதே? எங்கோ குழப்புதே…என்று தான் எதுவும் புரியாமல் தவித்தார்கள். இதுக்கும் மேல் மண்டையை போட்டு உடைக்க கூடாது என்று நினைத்து எல்லோருமே கொஞ்சம் அமைதி அடைந்து இருந்தனர்.

இந்த நேரத்தில் 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் நாங்கள் துல்லியமாக கணித்து விட்டோம் இதோ உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம் என்று பல்வேறு கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டன.

அதுவும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பும் போது தெரிவிக்கப்படும் கவுண்ட் டவுண் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பே இன்னும் 48 மணி நேரம்... இன்னும் 24 மணி நேரம்... இன்னும் 24 நிமிடங்கள் என்று எதிர்பார்ப்புகளை எகிற வைத்து விட்டன. அரசியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி ஓட்டு போட்டவர்களிலும் பலர் நாம் ஓட்டு போட்ட கட்சி வெற்றி பெறுமா என்று தெரிந்து கொள்ள தொலைக்காட்சி பெட்டிகள் முன்பு அமர்ந்து விட்டார்கள். எதிர்பார்ப்புடன் வெளிவந்த முடிவும் எந்த முடிவுக்கும் வராதபடி முடியை பிய்த்துக் கொள்ள வைத்து விட்டதுதான் உண்மை.

தி.மு.க. கூட்டணிதான்...

என்.டி.டி.வி., மேட்ரிஸ், ரிபப்ளிக் பி மார்க், சாணக்யா, ஸ்ட்ராட்டசிஸ், மும்பை சட்ட பஜார், ஆகிய முன்னணி நிறுவனங்கள் தி.மு.க. கூட்டணி 125-க்கு மேல் தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு என்று கூறி உள்ளன.

அ.தி.மு.க. கூட்டணிதான்...

சி.என்.என்., டைம்ஸ் நவ், ஜே.வி.சி., வோட்வைப் ஆகிய நிறுவனங்கள் 128 தொகுதிகள் வரை அ.தி.மு.க. வெல்ல வாய்ப்பு என்று அடித்து சொல்லி உள்ளன.

த.வெ.க. தான்...

இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா 120 தொகுதிகள் வரை த.வெ.க. கைப்பற்ற வாய்ப்பு என்று கணித்துள்ளன. இரட்டை இலக்கங்களில் த.வெ.க. கைப்பற்றுவதை பொறுத்து தொங்கு சட்டமன்றம் வருவதற்கான வாய்ப்பும் இருப்பது போல் கருத்துக் கணிப்புகள் பிரதிபலிக்கின்றன.

அதாவது இப்படி 4 விதமான முடிவும் வர வாய்ப்பு இருப்பதாக குழப்பத்தோடு ஒரு முடிவை வெளிப்படுத்தி எல்லோரையும் குழம்ப வைத்து விட்டன.

ஏற்கனவே 4 முனை போட்டி களத்தில் ஏற்பட்டது போல் நாலுவிதமான முடிவுகள் வரலாம் என்பது தான் தமிழகம் முழுவதும் உலா வரும் கருத்துக்கள்.

அதாவது தி.மு.க. ஆட்சியை தக்க வைக்கும்...

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்... ஒரு வேளை

த.வெ.க. வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இல்லை... இல்லை.. இந்த குழப்பத்தில் தொங்கு சட்டமன்றம் உருவாகத்தான் வாய்ப்பு...

இப்படி 4 விதமான கருத்துக்கள் நாலா பக்கங்களிலும் பேசப்படுகிறது.

கடந்த காலங்களில் 3 அல்லது நான்கு முனை போட்டிகள் ஏற்பட்டும். கடைசியில் திராவிட கட்சிகள் இரண்டில் ஒன்று என்பதை உறுதியாக கணித்து விட்டார்கள்.

ஆனால் இந்த முறை புதிய வரவான த.வெ.க.வின் தாக்கம்தான் தேர்தல் முடிவு பற்றிய எதிர்பார்ப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் தொடக்கத்தில் விஜய் சென்ற இடமெல்லாம் கூடிய கூட்டங்கள் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்க தவறவில்லை. ஆனால் நடிகர் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். அதெல்லாம் ஓட்டாக மாறி விடாது என்று ஆறுதல்படுத்தி கொண்டார்கள்.

ஆனால் ஓட்டுப்பதிவின் போது எல்லா இடங்களிலும் பரவலாக விசில் சத்தம் கேட்டதுதான் எல்லா கட்சிகளையும் அதிர்ச்சி அடைய வைத்து விட்டன. முடிவை கணிக்க முடியாமலும் செய்து விட்டன.

குறிப்பிட்ட சதவீத வாக்குகளை விஜய் அள்ளுவார் என்பதை எல்லோருமே கூறுகிறார்கள். அந்த குறிப்பிட்ட சதவீத வாக்குகள்தான் யாரை காலி செய்யும்? யாருக்கு கை கொடுக்கும்? என்பதுதான் பல யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

விஜய் பிரிக்கும் வாக்குகள் தி.மு.க.வின் அதிருப்தி வாக்குகள். அந்த வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு செல்வது தடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அ.தி.மு.க. வெற்றியும் தடுக்கப்பட்டு உள்ளது. இது எங்களுக்கே சாதகமாக இருக்கும் என்பது தி.மு.க.வினரின் கணிப்பு.

அ.தி.மு.க.வினரின் கணிப்பு வேறுவிதமாக உள்ளது. தி.மு.க. மீதான அதிருப்தி ஓட்டு முழுவதும் த.வெ.க. பக்கம் திரும்பாது. எங்களுக்கும் கிடைக்கும். முக்கியமாக சிறுபான்மையினர் வாக்குகள் எங்களைவிட தி.மு.க.வுக்கே அதிகமாக கிடைக்கும்.

ஆனால் இந்த முறை அந்த வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் விஜய் பக்கம் திரும்பும். எனவே கூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்பது அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்த 2 பிரதான கட்சிகளையும் தாண்டி த.வெ.க. எப்படி வெற்றி பெற முடியும்?

இதற்கு த.வெ.க.வினர் கூறும் பதில், ‘மக்களிடம் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. புதிய கட்சிக்கு வாய்ப்பு கொடுக்கலாமே என்று நினைக்கிறார்கள். வீட்டுக்கு ஒரு ஓட்டு என்பதில் மாற்றமில்லை. 39 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 கோடியே 38 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் 2 கோடியே 2 லட்சம் பேர் வாக்களித்து உள்ளார்கள். அதில் பெரும் பங்கு எங்களுக்குத்தான் விழுந்திருக்கும். எனவே நாங்கள் ஆட்சிக்கு வரவும் சாத்தியமுள்ளது என்கிறார்கள்.

ஒரு வேளை இரட்டை இலக்கத்தில் த.வெ.க. வெற்றி பெற்றால் இழுபறிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதே மற்றொரு யூகம். எல்லா தேர்தல்களிலும் கருத்து கணிப்புகள் வெளியாவது வழக்கம்தான். அதில் சில பலிக்கும். சில பலிக்காமல் போகும். எல்லா தேர்தல்களிலும் அதை பார்த்துதான் வருகிறோம்.

இந்த தேர்தலில் மக்கள் எந்த மாதிரி முடிவுகளை யூகிக்கிறார்களோ அந்த முடிவுகள்தான் கணிப்புகளாகவும் வெளிவந்துள்ளது. எதையும் உறுதிப்படுத்த முடியாமல் எல்லா தரப்பிலுமே குழப்பமே நிலவுகிறது.

இதற்கு விடை தெரிய இன்னும் 72 மணி நேரம்.

அதுவரை பொறுமை காப்போம்!

காத்திருப்போம்...!

X

Maalai Malar
www.maalaimalar.com