‘கரூரிலிருந்து தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும்’ - முதலமைச்சருக்கு செந்தில்பாலாஜி பதிலடி

அசாதாரண சூழ்நிலையிலும் மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
‘கரூரிலிருந்து தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும்’ - முதலமைச்சருக்கு செந்தில்பாலாஜி பதிலடி
Published on

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குவது, புதிய தொழில்துறைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் இன்று கலந்துகொண்டார்.

இதில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யின் உரைக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்வினையாற்றியுள்ளார்.

கரூரில் 41 பேர் இறந்த செய்தியை பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தும், தனிவிமானம் பிடித்து ஓட்டம் பிடித்தது யார் என மக்களுக்கு தெரியும் என செந்தில்பாலாஜி, முதலமைச்சர் விஜயை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்,

“கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?

திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஓடு. ஓடு.. ஓடு...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com