எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

எ.வ.வேலு மற்றும் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் கடந்த ஜூன் 25-ந் தேதி சோதனை நடத்தினர்.
EV Velu
Published on

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு ஐகோர்ட்டு வழங்கிய இடைக்கால தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் பணிகளே நடைபெறாத நிலையில், முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில் தொகை விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.

லுக் அவுட் நோட்டீஸ்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து, த.வெ.க. அரசு அமைந்த பிறகு, தி.மு.க. முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, துறை அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எ.வ.வேலு மற்றும் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் கடந்த ஜூன் 25-ந் தேதி சோதனை நடத்தினர்.

அடுத்த நாளான 26-ந்தேதி எ.வ.வேலு மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை தேடப்படும் நபராக அறிவித்து போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். தனக்கு எதிரான வழக்கையும், லுக்-அவுட் நோட்டீசையும் ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் எ.வ.வேலு மனு தாக்கல் செய்தார்.

சென்னை ஐகோர்ட்

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜூலை 27-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்.

அதுவரை மனுதாரருக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது. லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் எ.வ.வேலு ஜூலை 15-ந் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என்று நிபந்தனை விதித்து, லுக்-அவுட் நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

ஐகோர்ட்டின் இந்த தடையினை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் வழக்கை அவசரமாக நாளைய தினமே விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு வக்கீல் தலைமை நீதிபதி சூரியகாந்திடம் வலியுறுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com