நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டே இருப்பார் - பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவர்.
எஸ். ஜானகி, மு.க.ஸ்டாலின்
எஸ். ஜானகி, மு.க.ஸ்டாலின்
Published on

பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி இன்று தனது 88வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மு.க. ஸ்டாலின் இரங்கல்

அந்த வகையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் எஸ்.ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"இசைக்குயில் எஸ். ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது.

அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்.

இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார்.

அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இசைக்குயில்

ஜானகி அம்மா என்று அழைக்கப்படும் இசைக்குயில் எஸ். ஜானகி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்யவதி தம்பதிகளுக்கு 23 ஏப்ரல் 1938 இல் பிறந்த எஸ்.ஜானகி சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார்.

நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார்.

1957ம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும்.

இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கணி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார்.

தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

நான்கு முறை தேசிய விருதுகள் பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார்.

இந்த நிலையில், இன்று வயது மூப்பு காரணமாக ஜானகி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com