

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கரூர் மாவட்டத்தில் இனாம் நிலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தோம்.
* தமிழகம் முழுவதும் இனாம் நிலங்களில் ஏற்பட்டுள்ள தடைகளை நிரந்தரமாக நீக்க வேண்டும்.
* மேகமலை மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவு தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
* விருதுநகரில் பறைச்சேரி என்ற கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும்.
* கரூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் உள்ள இனாம் நிலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழ்நாடு அரசு ஜூலை 9-ந்தேதி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த துணிச்சலான முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
* தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற இனாம் நிலங்களில் வசிப்பவர்கள், விவசாயம் செய்யக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காணக்கூடிய வகையில் தனி ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
* தமிழ்நாட்டில் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
* தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்ததாரர்களிடம் தூய்மைப் பணியாளர்கள் அடிமையாக தான் உள்ளனர்.
* அரசு நிர்ணயித்த ஊதியத்தை கூட தூய்மைப் பணியாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் வழங்குவதில்லை.
* தனியார் நிறுவனம் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
* சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியது ஏற்புடையதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.