வடசென்னை வளர்ச்சி திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்- சேகர்பாபு

ராயபுரம் மண்டலம் ஐந்தில் முதல்வர் திருமண மாளிகையில் பதிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளை அகற்றி உள்ளனர்.
சேகர்பாபு
Published on

தி.மு.க முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான பி.கே.சேகர்பாபு பல்லவன் சாலை அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

விரும்பத்தகாத நிகழ்வு

கலைஞர் ஆட்சியிலும் திராவிட மாடல் நாயகன் தி.மு.க தலைவர் ஆட்சியிலும் காமராஜர் புகழுக்கு புகழ் சேர்க்கும் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் 23 துறைகளையும் ஒருங்கிணைத்து காமராஜர் பிறந்த நாளில் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை தொடங்கி பல லட்சம் மக்களுக்கு இருப்பிட சான்றிதழ், சொத்து மாற்றம் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை போன்றவற்றை வழங்கினோம்.

பழனி கோவிலில் ரூ.100 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த துறையில் நடைபெறும் அனைத்து விரும்பத்தகாத நிகழ்வுகளையும் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின்போது தெளிவாக எடுத்துரைப்போம். 100 நாள் கணக்கு என்று வைத்து இருக்கிறோம். சென்னையை பொறுத்தவரையில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் மேற்கொண்ட 800 கோடி ரூபாய்க்கு மேலான பணிகளை ரத்து செய்துள்ளனர். அந்த பணிகளுக்கு மீண்டும் ஒப்பந்தம் போட்டு வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

வடசென்னை வளர்ச்சி திட்டம்

தி.மு.க தலைவர் சிந்தையில் உதித்த வடசென்னை வளர்ச்சி திட்டத்தை முழுமையாக முடக்கி வைத்து இருக்கிறார்கள். அந்த திட்டம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் பின்னி பிணைந்தவை. அந்த திட்டங்களை நிதி நெருக்கடி என்று காரணம் காட்டி முடக்கி வைத்துள்ளனர். இதன் மூலம் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், கழிவு நீரேற்று நிலையங்கள் தடையின்றி வழங்குவதற்கான மின்சாரங்கள் என்று அனைத்து பணிகளுக்கும் தடைகள் ஏற்படுத்தி உள்ளனர். இவை அனைத்தும் மக்களுக்கான திட்டங்கள். எனவே அவற்றை இந்த ஆட்சியாளர்கள் தொடர வேண்டும்.

காழ்ப்புணர்ச்சி

தி.மு.க ஆட்சி திட்டங்களை மாற்றுவது விடியல் பெயரை மாற்றுவது எல்லாம் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். மைலேடி பூங்காவில் அமைத்த கல்வெட்டை அகற்றி உள்ளனர். ராயபுரம் மண்டலம் ஐந்தில் முதல்வர் திருமண மாளிகையில் பதிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளை அகற்றி உள்ளனர். இதன் மூலம் தி.மு.க தலைவர் புகழை அழிக்க முடியாது. இதற்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com