த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் - சிங்கப்பூர் தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
Arrest
Published on

த.வெ.க. அரசை கவிழ்ப்பதற்கு ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக சிங்கப்பூர் தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசை கவிழ்ப்பதற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் சூடு பிடித்துள்ளது.

போலீஸ் காவல்

இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, தியாகராஜன், பெசன்ட் நகரை சேர்ந்த நரேஷ், கரூர் தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ் கார்த்திக் ஆகிய 5 பேரை போலீசார் 2 நாள் காவலில் எடுத்துள்ளனர். அவர்களிடம் இன்றும், நாளையும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

நாளை மாலை 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

சிங்கப்பூர் பிரமுகர்

கைதானவர்களுடன் சிங்கப்பூரில் இருந்து ஒருவர் பேசி இருப்பதாகவும், ரூ.35 கோடி பேர வழக்கில் அவரிடமும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாகவும் கோர்ட்டில் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அந்த சிங்கப்பூர் நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவரது பெயர் லட்சுமண பெருமாள். சிங்கப்பூரில் நீண்ட காலமாக வசித்து வரும் இவர் சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

ஹவாலா பணம் பரிமாற்றம்

இந்த தொடர்பின் மூலமாகவே குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் லட்சுமண பெருமாளை தொடர்பு கொண்டு முதலில் பேசியுள்ளனர். அவர்களது ஆலோசனையின் பேரிலேயே த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்காக சிங்கப்பூரில் இருந்தபடியே லட்சுமண பெருமாள் சென்னையை சேர்ந்த நபர்களோடு போனில் பேசி இருக்கிறார். சிங்கப்பூர் தொழில் அதிபரான இவர் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் இருந்தபடியே ஹவாலா பணம் பரிமாற்றம் மூலமாக ரூ.35 கோடியை வழங்குவதற்கு திட்டமிட்டதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான தகவல்கள் அனைத்தையும் திரட்டியுள்ள போலீசார் லட்சுமண பெருமாளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

லுக்அவுட் நோட்டீஸ்

இதைதொடர்ந்து லட்சுமண பெருமாள் சிங்கப்பூரில் இருந்து வேறு எங்கும் தப்பித்து சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செந்தில் பாலாஜி

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடினார்கள்.

இதை தொடர்ந்து தலைமறைவான இருவரும் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமின் அளித்தது.

செந்தில் பாலாஜியும், அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி தினமும் காலை மற்றும் மாலையில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் விரைவில் இருவரும் கையெழுத்துப் போட உள்ளனர்.

இதன் மூலம் ரூ.35 கோடி பேர வழக்கில் போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com