கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் - த.வெ.க.வுக்கு எதிரான வழக்கு வாபஸ்

ஒரே விஷயத்துக்காக ஏன் வழக்கு மேல் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Madras High Court
Published on

கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாக, தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கபட்டதை அடுத்து, த.வெ.க.வுக்கு எதிரான வழக்கு திரும்ப பெறப்பட்டது.

சென்னை ஐகோர்ட்

சென்னை ஐகோர்ட்டில், பரமசிவம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி வளாகங்களில், த.வெ.க. நிர்வாகிகள் நுழைந்து, தங்கள் கட்சி தலைவர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், தலைவருக்கு ஆதரவாக, விஜய் அண்ணா, விஜய் மாமா என மாணவர்களை வாழ்த்து கோஷங்கள் எழுப்பச் செய்து வருகின்றனர்.

கல்வி நிறுவனங்கள்

தேசிய தலைவர்கள் புகைப்படங்களுடன், த.வெ.க. தலைவர் படத்தையும் காட்சிப்படுத்துகின்றனர். கல்வி நிறுவனங்களில் சினிமா பாடல்கள் பாடப்படுகின்றன.

கல்வி நிறுவனங்களை, அரசியல் பிரசாரத்துக்காக தவறாகப் பயன்படுத்தி, மாணவர்களை அரசியல் ரீதியாக சுரண்டும் த.வெ.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அந்த வழக்குகள் தொடர்பாக பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஒரே விஷயத்துக்காக ஏன் வழக்கு மேல் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து கடந்த 10-ந்தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com