போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்

படுகாயம் அடைந்த ரவுடி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Gun
Published on

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளை ஒழிப்பதற்கு போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குற்ற செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்து வருகிறது.

இப்படி போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாத நேரங்களில் ரவுடிகளைப் பிடிக்கச் செல்லும் போலீசார் மீதும் அவர்கள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்று எல்லை மீறும் ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது.

பிரபல ரவுடி கருப்பு

இந்நிலையில், குன்றத்தூர் அருகே பிரபல ரவுடி துப்பாக்கியால் நேற்று இரவு சுட்டு பிடிக்கப்பட்டார். பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு (என்ற) தமிழழகு. 27 வயதான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஏ பிளஸ் ரவுடியான கருப்பு மீது திருமுடிவாக்கம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடும் உருவாக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீசார் அவரை ஏ பிளஸ் ரவுடியாக சரித்திர பதிவேட்டில் சேர்த்துள்ளனர்.

நாட்டு வெடிகுண்டு

ரவுடி கருப்பு தனது எதிரி ஒருவரை தீர்த்துக் கட்டுவதற்காக திட்டம் தீட்டி வருவது போலீசுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட பகையால் அந்த நபரை தீர்த்துக்கட்ட ரவுடி கருப்பு நாட்டு வெடிகுண்டைத் தயாரித்து வரும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.

குன்றத்தூர் அருகே உள்ள காவனூர் பகுதியில் பதுங்கி இருந்து ரவுடி கருப்பு நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

ரவுடி கருப்புடன் அவரது நண்பரான சூர்யாவும் இருந்தார். நாட்டு வெடிகுண்டு தயாரித்த இடத்திற்குச் சென்றதும் திருமுடிவாக்கம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீஸ் ஏட்டு விஜயகுமார் ஆகியோர் ரவுடி கருப்புவை போலீஸ் வேனில் ஏறுமாறு கூறினார்கள். ஆனால் அவரும், அவரது கூட்டாளி சூர்யாவும் அதற்கு உடன்படவில்லை.

ரவுடி கருப்பு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ஏட்டு விஜயகுமாரை வெட்டினார். இதில் அவருக்கு கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

துப்பாக்கிச்சூடு

இதையடுத்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தங்களை தற்காத்து கொள்வதற்காக ரவுடி கருப்பு மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ரவுடியின் வலது காலில் குண்டு பாய்ந்து அங்கேயே அவர் சுருண்டு விழுந்தார். உடனே, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் இருவரும் துரித வேகத்தில் செயல்பட்டு இருவரையும் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருப்புவின் கூட்டாளியான சூர்யாவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

தாம்பரம் போலீஸ் கமிஷனராக பிரேமானந்த் சின்கா பொறுப்பேற்ற பிறகு ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் குற்ற செயல்களை ஒழித்துக் கட்டவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில்தான் ரவுடி கருப்புவின் நடமாட்டத்தையும் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்தான் ரவுடியை பிடிக்க சென்ற இடத்தில் அவர் தாக்குதலில் ஈடுபட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் இந்த நடவடிக்கை மற்ற ரவுடிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com