

தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் பத்திரப் பதிவு தொடர்பாக, தற்போதைய த.வெ.க. பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பழனி கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் நில மோசடி நடந்துள்ளது. இதில் யார் உடந்தையாக இருந்தார்கள் என்பதை பற்றி விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தும், காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கோவில்கள் இடத்தை பதிவே செய்யமுடியாது. கோவில், அரசு நிலம், நீர்நிலை, வக்பு இடங்கள் குறித்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் பதிவு இருக்கும் முதல் நாளே டோக்கன் போடப்பட்டிருக்கும். இதில் தெரியாமல் பத்திரப்பதிவு நடைபெற வாய்ப்பில்லை.
பதிவுத்துறையில் மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் உள்ளனர். அமைச்சர் நிர்மல்குமார் நேரடியாக பதில் சொல்லாமல் கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பதிவுத்துறையில் மோசடி என்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப்பதிவு குறித்து யாரும் விமர்சித்தது கிடையாது. சில தவறுகள் நடந்தபோது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
519 பத்திரப்பதிவு அலுவலகத்தில் நான் எனது ஆதரவாளர்களை நியமித்ததாகக் கூறுகின்றனர். எந்த ஒரு அலுவலகத்திலும் நான் பத்திரப்பதிவு செய்ய சொல்லவில்லை. பொறுப்புள்ள அமைச்சர் இதுபோன்று பொதுவாக பேசக்கூடாது. சட்டத்துறையில் வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறுவதாக அவரது கட்சியைச் சேர்ந்தவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்திப்பதே வேலையாக பார்த்து வருகிறார். முதல்-அமைச்சரின் நிழல் அமைச்சராக நிர்மல்குமார் செயல்படுகிறார்.
அனைத்து துறைக்கும் நிர்மல்குமார் பதிலளிக்கிறார். அறநிலையத்துறை இடத்தை பதிவுசெய்ய முடியாது, ஆனால் எப்படி பதிவு செய்தனர்? குறிப்பாக ஒரு பதிவாளரை இடமாற்றி பதிவு செய்துள்ளனர். என் மீதான குற்றச்சாட்டை ஆதாரத்தோடு சொல்லுங்கள். ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்சம் இருக்காது என்றனர், 60 பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்தி ரூ.37 லட்சமும், நகராட்சி அலுவலகங்களில் 31 லட்சமும் கைப்பற்றினார்கள். அதற்கு என்ன பதில்? இதற்கு யார் பொறுப்பாவது?
மின்சார கட்டணம் இப்போது உயர்ந்துள்ளது. அமைச்சர் தனது இருதுறை சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும். கூட்டணி தொடங்கி அனைத்து துறைகள் குறித்து ஆல் இந்தியா அளவில் அவர்தான் பேசி பிரச்சனையை திசைதிருப்புகிறார். 589 பத்திரப்பதிவு அலுவலகங்களில் எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள் எனவும், என் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை கூறவேண்டும். வணிக வரித்துறையில் லீக்கேஜ் என நிதித்துறை செயலர் கூறியுள்ளார். அவர் இருக்கும்போது தான் வருவாயைப் பெருக்க திட்டம் தீட்டப்பட்டது.
வணிக வரித்துறையில் ரூ.96 ஆயிரம் கோடி வருவாய் இருந்தது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். 2021-ல் 96 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் 2026-ல் ரூ.1 லட்சத்து 43 ஆயி்ரம் கோடியாக வருவாய் வந்துள்ளது. பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்தது பின்னர் 3 சதவீதத்தில் தொடங்கி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
நான் 48 ஆண்டுகள் தி.மு.க.வில் உள்ளேன். ஒரே கட்சியில் 48 வருடமாக பொறுப்பில் உள்ளேன். ஆனால் அமைச்சர் நிர்மல் குமார் அ.தி.மு.க.வில் இருந்தார், பின்னர் மாறினார். 3.0 தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் எந்தெந்த நிலங்களை பதியக்கூடாது என விதிகள் வகுக்கப்பட்டன. ஆனால் எப்படி பதிவு செய்தார்கள் என தெரியவில்லை.
மூன்று நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கி வருகின்றனர். மக்கள் முடிவை ஏற்றுகொள்கிறோம். வெற்றியையும், தோல்வியையும் பார்த்துள்ளோம். கடந்த 3 மாதத்தில் மின்சாரம் ஆங்காங்கே தட்டுப்பாடாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளில் எங்கும் மின் தடை இல்லை. அவர்கள் பொய்யை திரும்ப திரும்பச் சொல்கின்றனர்.
பத்திரப்பதிவுத் துறை புகார் தொடர்பாக குழு அமைப்பதை வரவேற்கிறோம், புகார் வந்தால் நடவடிக்கைகள் எடுங்கள் என தெரிவித்தார்.