

சிவகாசியில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முதலமைச்சர் பதவியில் உள்ள விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்ணிய குறைவாக பேசக்கூடாது. மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ? அப்போது தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி இருக்காது என தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக-அதிமுக கூட்டணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனும், ராஜேந்திர பாலாஜியும் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்கள்.
அதிமுகவினர் என்ன பேசுவதென தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது வரை ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தான் திமுக உள்ளது.
தற்போது வரை தவெக எம் எல் ஏக்களை வாங்குவதற்காகவே திமுக-அதிமுக வினர் முயற்சி செய்து வருகின்றனர்.
இபிஎஸ் என்ற ஒருவர் பொதுச் செயலாளராக இருக்கிறாரா என்பதையே அவர்கள் மறந்துவிட்டனர்.
பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்குவது மட்டும் தான் குதிரை பேரம்.
குதிரை பேரத்தில் ஈடுபட்டது திமுக தானே தவிர, தவெக அல்ல.
குதிரை பேரத்தில் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நபர்கள் தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
அதிகாரிகளை அருகில் வைத்துக் கொண்டு அமைச்சர் அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.