வழக்குகளை ரத்து செய்யக்கோரிய பொன்ராஜின் மனுக்கள் தள்ளுபடி- ஐகோர்ட் உத்தரவு

தற்போது அமைச்சர்களாக உள்ள 2 பேர், தேர்தலுக்கு முன் அளித்த புகார்கள் மீது புதிய அரசு பொறுப்பேற்ற பின், எந்தவித ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என வாதிடப்பட்டது.
சென்னை ஐகோர்ட்
Published on

த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேட்டியளித்த பெண் தொண்டர்களை இழிவாக விமர்சித்ததாக, அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகருமான பொன்ராஜுக்கு எதிராக கடந்த மார்ச் 26-ந்தேதி அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்குமார் ஆகியோர் புகார் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் மே 12-ந்தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், கடலூர் போலீசாரும் வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.

ரத்து செய்ய கோரி

இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் பொன்ராஜ் தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். அப்போது பொன்ராஜ் தரப்பில், யூ டியூப் சேனல் பேட்டியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டுமே மனுதாரர் பதிலளித்தார். மற்றபடி பெண்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை.

தற்போது அமைச்சர்களாக உள்ள 2 பேர், தேர்தலுக்கு முன் அளித்த புகார்கள் மீது புதிய அரசு பொறுப்பேற்ற பின், எந்தவித ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என வாதிடப்பட்டது.

போலீஸ் தரப்பில், மறைந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றியவர், இதுபோல பேசியிருக்க கூடாது. அவரது பேச்சு ஒட்டுமொத்த பெண்களை குறிக்கும் வகையில் பொதுப்படையாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு அடங்கிய வீடியோக்கள், இன்னும் இணையதளத்தில் உள்ளன. வழக்கு முதல் தகவல் அறிக்கை என்ற நிலையில் மட்டுமே உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதம் முன் வைக்கப்பட்டது.

மனுக்கள் தள்ளுபடி

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொன்ராஜின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இன்று இந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. பொன்ராஜ் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்து, அவரது மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com