ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.. பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
எஸ். ஜானகி, விஜய்
எஸ். ஜானகி, விஜய்
Published on

பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி இன்று தனது 88வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் விஜய் இரங்கல்

அந்த வகையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், எஸ்.ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதவில்,

“இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.

பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.

அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இசைக்குயில்

ஜானகி அம்மா என்று அழைக்கப்படும் இசைக்குயில் எஸ். ஜானகி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்யவதி தம்பதிகளுக்கு 23 ஏப்ரல் 1938 இல் பிறந்த எஸ்.ஜானகி சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார்.

நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார்.

1957ம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும்.

இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கணி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார்.

தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

நான்கு முறை தேசிய விருதுகள் பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார்.

இந்த நிலையில், இன்று வயது மூப்பு காரணமாக ஜானகி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com