நாளை மறுநாள் கரூர் வருகை: முதலமைச்சர் விஜய் விழாவுக்கான ஏற்பாடு தீவிரம்

முதலமைச்சர் நாளை மறுநாள் கரூர் வருகை தருவதை முன்னிட்டு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய்
Published on

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது, தமிழக வெற்றி கழகம் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

சி.பி.ஐ. விசாரணை

மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை சென்னை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறினார். இது தொடர்பான வழக்கினை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய்யும் ஆஜரானார்.

பின்னர் நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் கரூருக்கு நேரில் வருகை தந்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக கூறப்பட்டது.

இதற்கிடையே உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலைக்கான உத்தரவு வழங்குவது விசாரணையை பாதிக்கும் என தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதை தொடர்ந்து நீதிபதிகள் தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்து முதலமைச்சர் கரூர் செல்ல தடை இல்லை என உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் விஜய் கரூர் வருவது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கரூர் வெண்ணெய்மலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் தமிழக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அன்பு நேற்று ஆய்வு செய்தார்.

பிரம்மாண்ட பந்தல்

ஆய்வின் போது திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், திருச்சி சரசு யு.ஐ.ஜி. சிபி சக்கரவர்த்தி, கரூர் எஸ்.பி. ஹரிகிரண பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர். இங்கு நாளை மறுநாள் காலை மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் அரங்கத்தின் வெளியே 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது.

தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக இந்த பந்தல் அமைக்கும் பணிகள் சற்று தொய்வடைந்தது. இப்போது தடைகள் விலகியதால் மேற்கூரை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

நலத்திட்ட உதவி

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பிற்பகல் 2 மணிக்கு கரூர் தான்தோன்றி மலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் நாளை மறுநாள் கரூர் வருகை தருவதை முன்னிட்டு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com