அரசியலில் நான் ஒரு கத்துக்குட்டி- துரை வைகோ

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது.வாரிசு அரசியலை பற்றி பேசக்கூடிய தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை.
அரசியலில் நான் ஒரு கத்துக்குட்டி- துரை வைகோ
Published on

புதுக்கோட்டை:

திருச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நகர கட்டமைப்புகளை மேம்படுத்த என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன். புதுக்கோட்டை மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன். பல ஆண்டுகளாக நிறைவேறாத இந்த திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

அரசியலை பொறுத்தவரை என்னால் முடியாததை செய்து தருவேன் என்று கூறமாட்டேன். தேர்தல் பிரசாரத்திற்காக நான் செல்லும்போது சில திட்டங்கள், கோரிக்கைகள் எனது ககவனத்திற்கு வந்தால் அதை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன்.

நான் நேரடி அரசியலுக்கு வந்து 4 ஆண்டுகள்தான் ஆகிறது. பலவற்றை நான் கற்றுக்கொள்ளவேண்டி உள்ளது. அரசியலை பொருத்தவரை நான் ஒரு கத்துக்குட்டி எனலாம். மக்களிடம் எப்படி பேசுவது? சக அரசியல் பிரமுகர்களிடம் எப்படி நடந்துகொள்வது என பல விவரங்களை நான் அறிந்துகொள்ளவேண்டி உள்ளது. வைகோ போல என்னால் செயல்பட முடியாது.

ஆனால் முயற்சி செய்வேன். என்னை வேட்பாளராக அறிவித்ததுமே என்னிடம் இது முதல் தேர்தல் களம். உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்று கேட்டார்கள். அப்போது நான், என் மனதில் பெரிய சந்தோஷமும் கிடையாது, வருத்தமும் கிடையாது என்றேன்.

ஆனால் நான் வெற்றி பெற்றால் லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்வது என்ற கேள்வி என் மனதில் உள்ளது. வைகோ மற்றும் தலைவர்கள் எனக்கு வழிகாட்டுவார்கள்.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். தேர்தல் முடிந்தால்தான் வளர்ந்துள்ளதா என்பது தெரிய வரும்.

இந்திய அளவில் பாரதிய ஜனதாவில் தற்போது இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலர் முத்த தலைவர்களின் மகன்கள் தான். எனவே வாரிசு அரசியலை பற்றி பேசக்கூடிய தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை.

எங்கள் கட்சி நிர்வாக குழுவில் என்னை தேர்தலில் போட்டியிடுமாறு நிர்வாகிகள் பேசுகையில் நான் மறுத்தேன். ஆனாலும் நிர்வாகிகளின் தொடர் வற்புறுத்தலால் நான் சம்மதித்தேன். எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com