

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
“இன்றோடு தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவை சேலம் மாநகரில் நடத்துகிறோம்.
தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்துக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நடக்கும் தேர்தல் இந்த சட்டமன்றத் தேர்தல். ஒரு குடும்பம் பிழைக்க 8 கோடி மக்களை வாட்டி வதைக்கிறார்கள். இந்த குடும்ப ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் முடிவுகட்டுங்கள். இந்த தேர்தல் கருணாநிதி குடும்பத்துக்கு மூடுவிழா நடக்கும் தேர்தல்.
சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கே பார்த்தாலும் போதைப்பொருள் பல வடிவத்தில் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு. அரசு தடுக்க முன்வரவில்லை, ஏனெனில் கஞ்சா விற்பனைக்கு திமுக நிர்வாகிகள் துணை நிற்கிறார்கள். இதனால், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போதை ஆசாமிகளால் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்து 3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. இதையெல்லாம் சரி செய்ய அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.
அண்ணாநகரில் சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை, நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு தீர்ப்பு கொடுத்தது, அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். அப்படியென்றால் குற்றவாளிகளை காப்பாற்றுகின்றனர். குற்றவாளிகள் வேண்டப்பட்டவர்கள் என்பதால் தடை வாங்குகிறார்கள்.
கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர், அ.தி.மு.க. நீதிமன்றத்தை நாடினோம், சி.பி.ஐ. விசாரணை கேட்டோம், அதன்படி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதற்கும் மேல்முறையீடு செய்தனர், அப்படி யென்றால் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் அரசு ஸ்டாலின் அரசு. குற்றம் அதிகரிக்க காரணமே திமுக அரசுதான்.
நான் முதல்வரானபோது எவ்வளவு சோதனைகள்..? நம் கட்சியை உடைக்க ஸ்டாலின் திட்டம் போட்டார், அதை தூள்தூளாகினோம், கருணாநிதி குடும்பத்துக்கே இதுதான் வேலை. அதையெல்லாம் உடைத்து அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் கூட்டணி வைத்தோம், எங்களை வீழ்த்த ஸ்டாலினால் மட்டுமல்ல, அவர் அப்பாவாலும் முடியவில்லை.
பத்து தோல்வி பழனிசாமி என்கிறார் ஸ்டாலின், 2021 தேர்தலில் சேலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்று அறிவித்தோம், 11ல் 10 வென்றோம். அப்போதே நாங்கள் வென்றோம், இப்போது இன்றைய அரசு மக்களிடம் அவப்பெயரை சம்பாதித்திருக்கிறது. மக்கள் வெறுத்து ஒதுக்கினர், அரசு ஊழியர், செவிலியர், சத்துணவு ஊழியர் என அனைத்து தரப்பும் போராடி சலித்துப்போய் தேர்தலை சந்திக்கிறார்கள்.
தி.மு.க. 200 இடம் பெறும் என்கிறார்கள், 20 இடம் பெறுவதே ஆச்சர்யம். 2011ல் நீங்கள் எதிர்க்கட்சியாக வந்தீர்களா..? கருணாநிதி இருக்கும்போதே எதிர்க்கட்சியாக வரமுடியவில்லை, 2011 முதல் பல இடத்தேர்தலில் தோல்வி அடைந்தீர்கள், உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். இதெல்லாம் தெரிந்தால்தானே பேச முடியும்? எதுவும் தெரியாத மனுதரிடம் பேசி என்ன பண்ண முடியும்? அம்மா மறைவுக்குப் பிறகு இதே கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாக வந்தது, 75 இடங்களில் வென்றோம், அதிமுக 66 இடம் வென்றோம். மக்கள் பிரச்சனையைப் பேசினோம்.
தி.மு.க. பலம் வாய்ந்த கூட்டணி என்கிறார். உண்மை அதுவல்ல. ஏற்கனவே இருந்த அதே கூட்டணிதான், ஒரே ஒரு கட்சிதான் சேர்ந்திருக்கிறது. அன்புமணி சொன்னது போல் அவர் அங்கு போய் நமக்காக பிரசாரம் செய்கிறார். எப்போதும் உண்மை உறங்காது, தர்மம் தோல்வியடையாது. எதிரியிடம் போய் கைகோர்த்து நின்றாலும் உள்ளே இருக்கும் மனம் வெளிப்படுத்துகிறது, நமக்காக குரல் கொடுப்பதற்கு நன்றி.
எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் 39 எம்.பி.க்கள் வெற்றி பெற்றோம் என்கிறார். அத்தனை பேரும் பெஞ்ச்சை தேய்க்கிறார்கள். பஸ்போர்ட், ராணுவ தளவாடத் தொழிற்சாலைக்கெல்லாம் மத்திய அரசிடம் கேட்டீர்களா? ஸ்டீல் பிளான்ட்டில் 500 ஏக்கரில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது, அதையும் தி.மு.க. கூட்டணி எம்பிக்கள் அழுத்தம் கொடுத்து பெறவில்லை. இதனால் நிலுவையில் உள்ளது, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ராணுவ உதிரிப்பாக தொழிற்சாலை கொண்டுவருவோம், ஜவுளிபூங்கா கொண்டுவருவோம். இதனால் பல பேருக்கு வேலை கிடைக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கேபிள் கட்டணம் பாதியாக குறைக்கப்படும்.
மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் செய்கிறார். 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் இதை சொல்லவில்லை, இப்போது தான் சொல்கிறார். இதற்குக் காரணம் அதிமுக அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது, 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு, 5 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு என மொத்தம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கி வருகிறது.
அம்மா வழியில் வந்த அரசு 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன் மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தொழிற்சாலைகள் உற்பத்தியை தொடங்கியதால்தான் இந்த பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் தொழில் முதலீடு 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 15 லட்சத்து கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது, என்று பச்சை பொய் சொல்கிறார், இதனால் 35 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாம், 77 சதவீதம் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார். அப்படியென்றால் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். அத்தனையும் பொய்.
அன்புமணி சொன்னது போல, பெண்களுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய வாய்ப்பை திமுக தடுத்துவிட்டது.
சட்டப்பூர்வமாக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்திருக்கும், அதை தடுத்துவிட்டனர். உங்கள் உரிமையை பறித்த கட்சி திமுக, காங்கிரஸ். எனவே, பெண்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. பெண்கள் மசோதாவை தோற்கடித்த கட்சிக்குத் தகுந்த பாடம் புகட்டுங்கள்.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து பொய் சொன்னார். அதற்கு மத்திய உள்துறை மந்திரி எண்ணிக்கை குறையாது என்று உறுதியளித்தார். அதையே நானும் சொன்னேன். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னதை தண்ணீரில் எழுத வேண்டும் என்றார். நான் சொன்னபடியே 39 இடங்கள் 59 ஆக உயர்த்தப்படும், 7.18 சதவீதம் இருக்கிறது, அது 7.23 சதவீதம் ஆக உயரும். இதற்கு பேச்சு மூச்சைக் காணோம்.
தி.மு.க. ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் பிரிட்ஜ் வழங்கப்படும். சரியான நேரத்திற்கு பணியிடங்களுக்குச் செல்வதற்கும், படிக்கச் செல்வதற்கும் ஏதுவாக, 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். பெண்களைப் போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.
ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரிசி தரமில்லை என்ற தகவல் வருகிறது. அதனால் நவீன அரிசி ஆலையில் உற்பத்தி செய்து கடையில் கிடைக்கும் அரிசி போன்றே ரேஷன் கடையில் கொடுக்கப்படும். விலையில்லா அரிசி கடை அரிசி போன்று கொடுப்போம். எத்தனையாயிரம் கோடி செலவானாலும் கொடுப்போம். ரேஷன் கடையில் இதுவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.
அ.தி.மு.க. கூட்டணிஅதிக இடங்களில் வெல்லும், 210 இடங்களில் வெல்லும், அதிமுக தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ஆட்சி அமைத்து மூன்றே மாதத்தில் போதைப்பொருள் ஒழிக்கப்படும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும். விலைவாசி கட்டுபபட்டில் வைக்கப்படும், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும்.
மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட துணை நிற்பீர்களா? குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா?
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஏற்கனவே 195 தொகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினேன், தேர்தல் அறிவித்த பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தேர்தல் பிரசாரம் நடத்திவிட்டேன். நம் மண்ணில் பிரசாரத்தை நிறைவுசெய்வது எல்லையற்ற மகிழ்ச்சி. இன்றைக்கு சேலம் மாநகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது, இந்த எழுச்சியோடு 23ம் தேதி வாக்குச்சாவடி சென்று இரட்டை இலை சின்னத்துக்கும், மாம்பழம் சின்னத்துக்கும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தாருங்கள்.
சேலம் மாவட்டம் 11 தொகுதியும் வெற்றி பெறச் செய்ய வேண்டும், 100க்கு 100 சதவீம் வெற்றி பெற வாக்களியுங்கள். அ.தி.மு.க. வின்னிங்…
இவ்வாறு அவர் பேசினார்.