மிஸ் பண்ணிடாதீங்க! நாளை கூடுதல் டோக்கன்களுடன் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகங்கள்

பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.
பத்திரப்பதிவு
Published on

நாளை மறுநாள் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்களாகக் கருதப்படும் நாட்களில் பொதுவாகவே ஆவணப் பதிவுகள் அதிகளவில் நடைபெறும். அத்தகைய நாட்களில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.

பொதுமக்கள் கோரிக்கை

தற்போது ஆடி மாதம் தொடங்க இருப்பதை முன்னிட்டு நடப்பு (ஆனி) மாதத்தின் கடைசி நாளான 16-ந்தேதி (நாளை) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு

எனவே, நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஆடி மாதத் தொடக்கத்தையொட்டி ஆவணப் பதிவு செய்யக் காத்திருக்கும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com