

கோவையை அடுத்த சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சிறுமிக்கு நேர்ந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைக்கு ஆளான சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
மேலும், அமைச்சர்கள் விஜய் தமிழன், சம்பத் குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோரை சந்தித்து ரூ.7 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.