முதலமைச்சர் விஜய் இன்று கரூர் பயணம் - 32 பேருக்கு அரசு பணி ஆணை வழங்குகிறார்

முதலமைச்சர் விஜய் மக்களை சந்தித்தபடி ரோடு-ஷோ நிகழ்ச்சி நடத்துகிறார்.
CM Vijay
Published on

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 32 பேர் குடும்பத்துக்கு கரூரில் இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஜய் அரசு பணி ஆணை வழங்குகிறார்.

முதலமைச்சர் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மே மாதம் 10-ந்தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதலமைச்சர் விஜய் திருச்சி சென்றார்.

திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னை வெற்றி பெறச்செய்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

கரூர் வருகை

முதலமைச்சர் விஜய் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்படுகிறார். அவரது விமானம் காலை 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள்.

ரோடு-ஷோ

திருச்சி விமான நிலைய வரவேற்பை தொடர்ந்து காலை 10.40 மணிக்கு முதலமைச்சர் விஜய் கார் மூலம் கரூருக்கு புறப்படுகிறார். மதியம் 12.45 மணிக்கு கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து அவர், கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு புறப்படுகிறார். அப்போது மக்களை சந்தித்தபடி ரோடு-ஷோ நிகழ்ச்சி நடத்துகிறார். சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பின்னர் ஓய்வு எடுக்கிறார்.

தொழிற்சாலைக்கு அடிக்கல்

பிற்பகல் 2.50 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் விஜய், 3 மணிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் மணவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைய உள்ள தோல் அல்லாத காலணி தயாரிக்கும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் சுமார் 13 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சேர்ந்த 32 பேருக்கு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் வகையில் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் மாலை 4.10 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு செல்கிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 6 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் ரோடு-ஷோ செல்ல உள்ள அட்லஸ் கலையரங்கம் முதல் சுற்றுலா மாளிகை வரை கரூர்-கோவை சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு சாலை ஓரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள அட்லஸ் கலையரங்கம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com