திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூருக்கு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்

கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேச உள்ளார்.
CM Vijay
Published on

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 32 பேர் குடும்பத்துக்கு கரூரில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஜய் அரசு பணி ஆணை வழங்குகிறார்.

முதலமைச்சர் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மே மாதம் 10-ந்தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதலமைச்சர் விஜய் திருச்சி சென்றார்.

திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னை வெற்றி பெறச்செய்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 32 பேர் குடும்பத்துக்கு இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஜய் அரசு பணி ஆணை வழங்க உள்ளார்.

முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்காக சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவர் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து கரூருக்கு சாலை வழியாக அவர் காரில் புறப்பட்டார். முதலமைச்சர் விஜயை காண சாலையோரங்களில் காத்திருந்த மக்கள் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேச உள்ளார்.

பிற்பகலில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் மணவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைய உள்ள தோல் அல்லாத காலணி தயாரிக்கும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் சுமார் 13 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சேர்ந்த 32 பேருக்கு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் வகையில் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் ரோடு-ஷோ செல்ல உள்ள அட்லஸ் கலையரங்கம் முதல் சுற்றுலா மாளிகை வரை கரூர்-கோவை சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு சாலை ஓரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் விஜயை காண காலையில் இருந்தே அட்லஸ் மைதானத்தில் மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com