தி.மு.க.-கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று பிரசாரம்

திருவாரூர் தெற்கு ரத வீதியில் இன்று மாலை பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
தி.மு.க.-கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று பிரசாரம்
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூரில் பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் சென்றடைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

திருவாரூர் தெற்கு ரத வீதியில் இன்று மாலை பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து 1-ந்தேதி காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அங்கு திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ந்தேதி மாலையில் கரூர் செல்கிறார். கரூர் ராயனூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

2-ந்தேதி (வியாழன்) காலை 9 மணிக்கு ஈரோடு சித்தோடு பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர், கோபி செட்டிபாளையம், ஈரோடு கிழக்கு, பவானி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

2-ந்தேதி மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சூலூர், கோவை வடக்கு, தெற்கு சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் பிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டு விட்டேன்…

மக்களுடன் இரண்டறக் கலக்கும் இப்பயணங்களின் வாயிலாக உங்களைச் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு திராவிட மாடல் 2.0-வுக்கு ஆதரவு கேட்டு வருகிறேன்.

வெல்வோம் ஒன்றாக தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com