முதலமைச்சரின் பிரசார வாகனத்தை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக தனது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
முதலமைச்சரின் பிரசார வாகனத்தை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்
Published on

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக தனது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

திருவாரூர் தெற்குரத வீதியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

திருவாரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் மாரிமுத்து, நன்னிலம் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது முபாரக், மன்னார்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை ஆதரித்து வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் நோக்கி புறப்பட்டார். தஞ்சாவூர் அருகே சாலியமங்கலத்தில் அவர் சென்ற பிரசார வேனை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்தி நிறுத்தி அதிரடி சோதனை மேற்கொண்டார்கள்.

முதலமைச்சர் அமர்ந்திருந்த முன்பகுதி கதவை திறந்து வேனில் ஏதும் இருக்கிறதா? என்று சோதனை நடத்தினார்கள். வேனின் பின்பகுதி கதவையும் திறந்து சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பெண் போலீசாரும் ஈடுபட்டான்.

முதலமைச்சரின் வாகனத்தில் எதுவும் இல்லாததால் சோதனைக்கு பிறகு முதலமைச்சரின் வாகனத்தை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com