

காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புளியால் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தொகுதி வேட்பாளருமான சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கருணாநிதி ஆட்சியில் ஒரு கிலோ அரிசி ரூ.2 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. அடுத்து வந்த ஆட்சியில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய், அதற்கு அடுத்து வந்த ஆட்சியில் அரிசி இலவசம் என்றனர்.
ஆனால் ரேஷன் கடையில் வழங்கும் இந்த அரிசியை எம்.பி., எம்.எல்.ஏ., சேர்மன், கவுன்சிலர் யாராவது சாப்பிடுகிறார்களா? ஏனென்றால் அந்த அரிசி தரம் இல்லை.
இப்படி அரசு வழங்கும் அரிசி தரம் இல்லை என்றால் எப்படி அது நல்ல அரசு ஆகும். உலக நாடுகளில் அரசு நடத்தும் நிறுவனங்கள் தரமான மருத்துவமனை, கல்வி, போக்குவரத்து, தடையில்லா மின்சாரம், குடிநீர் தரமானதாக இருக்கும்.
ஆனால் இங்கு உள்ள அரசு வழங்கும் அனைத்து சேவைகளும் தரமற்ற முறையில் உள்ளது. ஆனால் தனியார் நடத்தும் மருத்துவமனை கல்வி, போக்குவரத்து அனைத்தும் தரமாக உள்ளது. ஏன்?
அரசு இந்த மக்களை குடிக்க வைத்து கொல்லும் டாஸ்மாக் நடத்தி வருகிறார்கள். கமுதி மற்றும் வேப்பங்குளம் பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் ஏழை மக்களிடம் நிலத்தை பிடுங்கி தனியாரிடம் ஒப்படைத்து சூரிய ஒளி மின்சார தயாரித்து அதனை அரசு வாங்கி நம்மிடம் கொடுக்கிறது.
நாடு 10 லட்சம் கோடி கடனில் உள்ளது. இப்படி இருக்கும்போது இவர்கள் தலைவர்கள் என்று வீதியில் வருகிறார்கள். எப்படி அவர்களை மதிக்கிறீர்கள் கடன் வாங்கி தரமான கல்வி கொடுத்தார்களா ? மருத்துவமனை கொடுத்தார்களா? முதலமைச்சர் முதல் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் மருத்துவமனை தரம் உயரும். ஒரே ஒரு முறை எனக்கு வாய்ப்பு தாருங்கள் இந்த நாட்டை லஞ்சம் ஊழலற்ற சொர்க்க பூமியாக மாற்றித் தருகிறேன்.
நான் ஆட்சிக்கு வந்தால் எங்கும் தமிழ் தான், தமிழ் படித்தவனுக்கு தான் இங்கு வேலை. தமிழர்களை ஏமாற்ற நான் வரவில்லை. ஆளும் கட்சிகள் தேர்தல் அறிக்கையின் மூலம் காதில் தேன் ஊற்ற கூடாது. வாயில் ஊற்ற வேண்டும்.
டெல்லியில், கெஜ்ரிவால் சிறந்த ஆட்சி தந்ததால்தான் அவரை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர வைத்தனர் உங்கள் வாக்கை அநீதிக்கு எதிராக மாற்றுங்கள் என்றார்.