

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.
அதேபோல அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கில் சுப்பையா, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தேர்தல் வழக்குகளில், தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்கவேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன்வைப்பதுண்டு. இடைத்தேர்தல் நடத்தி எம்எல்ஏவை தேர்ந்தெடுத்த பின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்துவிட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும் என்பதால், தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும்வரை சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம், 1967 முதல் 2018-ம் ஆண்டு வரை பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனால் தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் சார்பில், தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கப் பெறவில்லை. அதனால், இந்த வழக்கில் நிலைப்பாட்டை தெரிவிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்யும்போது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை என தெரிவித்தார்.
முதல்வர் விஜய் சார்பில், இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் வாக்காளராக இல்லாத மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்ய அடிப்படை உரிமை இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதா, இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும் என வாதிடப்பட்டது.
இந்நிலையில், அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜூலை 31-ம் தேதி வரை காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.