பழனி முருகன் கோவிலின் ரூ.100 கோடி நிலம் மோசடி: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

மாவட்ட பதிவுத்துறை சார்பிலும் இந்த பத்திரப் பதிவு தொடர்பாக விசாரணை நடத்தி பதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பழனி முருகன் கோவில்
Published on

பழனி அடிவாரம் பூங்கோ ரோட்டில் தண்டபாணி சுவாமிகள் மடம் செயல்பட்டு வந்தது. இந்த மடத்தின் மூலமாக பழனிக்கு வரும் பக்தர்களுக்கு தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கவும், அன்னதானம் வழங்கவும், பழனி முருகனுக்கு கைங்கர்யம் செய்யவும் இந்து மதத்தை வளர்த்தெடுக்கவும், இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த மடம் பல ஆண்டுகளாக நிர்வாகிகளால் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது.

ரூ.100 கோடி

தண்டபாணி சுவாமிகள் மறைவுக்கு பின்பு அறக்கட்டளையை நிர்வாகம் செய்தவர்கள் இந்த இடம் எதற்காக கொடுக்கப்பட்டதோ அதனை மாற்றி வணிக ரீதியாக பயன்படுத்த முயற்சி செய்தனர். மேலும் பலரும் இந்த இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடி என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடாக பதிவு

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டபாணி சுவாமிகள் மடத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துவை தக்கராக நியமித்து மடத்தின் இடத்தை பராமரித்து வந்தனர்.

தற்போது இந்த இடத்தில் பழனி கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி செல்லும் வகையில் கட்டணம் இல்லாத வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான இடத்தை மடத்துக்கு சம்மந்தம் இல்லாத விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் ரூ.2 கோடிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை, பழனி டி.கே.என். புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவருக்கும் கடந்த 6-ந் தேதி பழனி சார்பதிவாளர் அலு வலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

விடுப்பில்

வழக்கமாக பத்திரப்பதிவு செய்யும் நபரை விடுப்பில் அனுப்பி விட்டு ஜஸ்டின் மணிகண்டன் மூலம் கடந்த 6-ந்தேதி இந்த பத்திரப்பதிவு நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி இந்த பத்திரப்பதிவு செய்ய முயன்றபோது அப்போதைய பதிவாளர் ஒத்துழைப்பு அளிக்காததால் முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். இதன் பிறகு தான் கடந்த 3-ந்தேதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மீண்டும் இடத்தை பதிய அனுமதி கேட்டு 6-ந்தேதி பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள்.

புகார் மனு

இந்த விவகாரம் பற்றி தெரியவந்ததும் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, பதிவுத்துறை தலைவர், துணைத் தலைவர், மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு முறையான ஆவணங்கள் இன்றி செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்தார். மேலும் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது குறித்து பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய 4 பேர் மீது மோசடி, சதி செய்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மாவட்ட பதிவாளர் நீக்கம்

மாவட்ட பதிவுத்துறை சார்பிலும் இந்த பத்திரப் பதிவு தொடர்பாக விசாரணை நடத்தி பதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவுத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் முதல் கட்டமாக அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளனர். இதன்படி முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மாவட்ட பதிவாளரான சசிகலாவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வரும் நிலையில் தன்னை கைது செய்ய தடை விதிக்கக்கோரி ஜஸ்டின் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி நாளை (17-ந்தேதி) இந்த வழக்கை ஒத்திவைத்து அதுவரை ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இந்த நிலையில் பழனி கோவில் பத்திர முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணையை இன்று அதிரடியாக தொடங்கினர்.

பொய்யான தகவல்

இதற்கிடையே இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை தொடர்புபடுத்தி சமூக வலை தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டது. இது குறித்து சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 3 சட்டப்பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வினோத், சூரியகுமார் என்பவர்களை கைது செய்து மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சந்தானலெட்சுமி தலைமையிலான போலீசார் மோசடி குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவர்மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவு மோசடி பின்னணியில் உள்ள அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட உள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிவில் பத்திரப்பதிவு மோசடி பற்றி அனைத்து பின்னணி தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com