

சொத்து தகராறு காரணமாகத் தனது சொந்தச் சகோதரர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வரும் ஜூலை 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொத்து பிரச்சனையில் சகோதரரை தாக்கிய வழக்கு தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜரானார்.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி மரிய வில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குடும்ப பிரச்சனையாக இருப்பதால் சமரச தீர்வு மையத்தில் தீர்வு காண அறிவுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில், அமைச்சர் மரிய வில்சன், அவரது தந்தை, சகோதரர், சகோதரியின் மனைவி ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோர் இன்று ஆஜரானார்கள்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சமரச பேச்சுவார்த்தை நிறைவடையாததால், விசாரணை ஜூலை 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோர் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.