கள்ளக்காதலி கழுத்தை அறுத்து கொன்று தற்கொலை நாடகமாடிய காதலன் கைது

கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரங்களில் உதயகுமாரை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை
Published on

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஅழகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி, கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மயில் (வயது 31). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

குழந்தைகள் அதிர்ச்சி

இந்தநிலையில் நேற்று காலை முனியசாமி வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றிருந்தனர். மாலையில் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அங்குள்ள அறையில் மயில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஏராளமான ரத்தம் வெளியேறி உயிரிழந்து கிடந்தார். அவரது கையில் கத்தி ஒன்றும் இருந்தது.

இதைப்பார்த்த குழந்தைகள் அதிர்ச்சியில் கூச்சல் போட்டனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக எண்ணி திரண்டு வந்தனர். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் மயில் பிணமாக கிடந்ததை பார்த்து உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மல்லாங்கிணறு போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்துகிடந்த மயில் கையில் இருந்த கத்தியை கைப்பற்றி அதனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.

கள்ளக்காதல்

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மயிலுக்கு அதே ஊரைச் சேர்ந்த திருமணம் ஆகாத உதயகுமார் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரங்களில் உதயகுமாரை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இது அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்து அவரது கணவரிடம் கூறியுள்ளனர். அவர் மற்றும் உறவினர்கள் கண்டித்தபோதிலும், மயில் அதனை கண்டுகொள்ளவில்லை. உதயகுமார், மயில் இடையேயான கள்ளத்தொடர்பு தடையின்றி தொடர்ந்து வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை மயில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த உதயகுமார் அங்கு வந்துள்ளார். அப்போது மயில் வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அவர் யார், உனக்கும், அவருக்கும் என்ற தொடர்பு என்று கேட்டு உதயகுமார் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கொலை

இதில் ஆத்திரம் அடைந்த உதயகுமார் மயிலை கீழே தள்ளி, அவரது கை, கால்களை பிடித்துக்கொண்டு கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். மேலும் சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயையும் கைகளால் மூடினார். இதனால் உதயகுமாரின் பிடியில் இருந்து மீள முடியாத மயில் ஒருசில விநாடிகளில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இந்த கொலையை மறைக்க திட்டமிட்ட உதயகுமார், அங்கிருந்து செல்லும் முன்பு, கொலைக்கு பயன்படுத்திய கத்தியை இறந்து கிடந்த மயிலின் கையில் சொருகி வைத்தார். இதன் மூலம் அவர் தற்கொலை செய்துகொண்டதுபோல் தெரியும் என எண்ணினார். ஆனால் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் உதயகுமார் சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து இன்று காலை கள்ளகாதலன் உதயகுமாரை மல்லாங்கிணறு போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் மயிலை கொலை செய்துவிட்டு, கத்தியை அவரது கையில் வைத்துவிட்டு தப்பியதும் தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரியாபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com