ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேர் கைது: திருமணமான முன்னாள் காதலியுடன் அடிக்கடி பேசியதால் தீர்த்து கட்டினர்

ஆத்திரமடைந்த சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து நீலகண்டனை மதுகுடிக்க அழைத்து சென்று சரமாரியாக தாக்கி கொலை செய்து இருப்பது தெரிந்தது.
கொலை
Published on

குன்றத்தூர், பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது29), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் வண்டலூர் -மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே உள்ள காலி இடத்தில் நண்பர்களுடன் மது குடிக்க சென்ற போது மோதல் ஏற்பட்டது.

பலத்த காயம்

இதில் பலத்த காயம் அடைந்த நீல கண்டனை அவரது நண்பர்களே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதற்கிடையே நீலகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து திருமுடிவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நீலகண்டனை மதுகுடிக்க அழைத்துச் சென்றது அவரது நண்பர்களான குன்றத்தூரை சேர்ந்த சஞ்சய், குகன், கார்த்திக், தங்கராஜ் ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.

தொல்லை

சஞ்சயின் தங்கையை சில ஆண்டுகளுக்கு முன்பு நீலகண்டன் காதலித்து வந்ததாகவும் பின்னர் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து உள்ளது. எனினும் நீலகண்டன், சஞ்சயின் தங்கையிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலமுறை நீலகண்டனை எச்சரித்தும் அவர் பேசுவதை விடவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து நீலகண்டனை மதுகுடிக்க அழைத்து சென்று சரமாரியாக தாக்கி கொலை செய்து இருப்பது தெரிந்தது. கைதானவர்களிடம் இருந்து ஆட்டோ, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com