செல்வப்பெருந்தகை பத்திரிகையாளர்களை சந்தித்தது எப்படி?- அண்ணாமலை கேள்வி

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அடிப்படையான விஷயங்களைக் கூட சரிபார்க்காமல் வடக்கு, தெற்கு என்று வசனம் பேசுவது, அவரது தேர்தல் தோல்வி பயத்தைக் காட்டுகிறது.
செல்வப்பெருந்தகை பத்திரிகையாளர்களை சந்தித்தது எப்படி?- அண்ணாமலை கேள்வி
Published on

சென்னை:

பா.ஜ.க. தமிழக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி அவர்களின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள், ராகுல்காந்தி பேசியதற்கு சற்றும் தொடர்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை எல்லாம் அடித்து விட்ட உண்மை, இன்றுதான் ராகுல் காந்திக்குத் தெரிந்திருக்கிறது போலும். செல்வப்பெருந்தகையை இனிமேல் எனது கூட்டத்தின் பக்கமே விடாதீர்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

ராகுல் காந்தியின் இன்றைய கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளிவந்தால், இன்னும் அசிங்கமாகிவிடும் என்ற பதட்டத்தில், செல்வப்பெருந்தகை, இன்று காலை, தனது வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டிற்குள்ளேயே சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு நாடகமாடினார். இதனை அடுத்து, வழக்கம்போல, சினிமா வசனங்கள் பேசி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொங்கல் வைக்க தற்போது, சோதனை நடந்ததாக செல்வப்பெருந்தகை கூறியது முழுப் பொய் என்று, வருமான வரித்துறை தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும், தன்னை வீட்டுக்குள்ளே முடக்கி வைத்ததாகக் கூறிய செல்வப்பெருந்தகை, வெளியே வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதிலிருந்து, அவர் கூறியது பொய் என்பது உறுதியாகியிருக்கிறது.

பள்ளி செல்லும் குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை. அவரது நகைச்சுவையை நம்பி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொங்கல் வைத்திருப்பதுதான் உச்சகட்ட நகைச்சுவை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அடிப்படையான விஷயங்களைக் கூட சரிபார்க்காமல் வடக்கு, தெற்கு என்று வசனம் பேசுவது, அவரது தேர்தல் தோல்வி பயத்தைக் காட்டுகிறது.

இந்த உதவாக்கரை கூட்டணி, தமிழக மக்களை எத்தனை ஏமாளிகள் என்று எண்ணினால், இப்படி ஒரு பொய்யை துணிந்து சொல்வார்கள்? என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com