717 மதுக்கடைகளில் எத்தனை மூடப்பட்டன?- அவற்றை வேறு இடங்களில் திறக்கவே கூடாது!- அன்புமணி

பல இடங்களில் இன்னும் மதுக்கடைகள் மூடப்படாமல் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வருகின்றன. இதை அனுமதிக்க முடியாது.
அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக உள்ள மதுக்கடைகளை இரு வாரங்களில் மூட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட்டிருந்த நிலையில், பெரும்பான்மையான மதுக்கடைகள் மூடப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், இந்த விஷயத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகுந்த ஏமாற்றமளிக்கின்றன.

பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை அடுத்த இரு வாரங்களில் மூடும்படி கடந்த 12-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட்டிருந்தார்கள்.

ஆனால், மதுக்கடைகளை மூடும் விஷயத்தில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதை சுட்டிக்காட்டியும், முதலமைச்சர் உத்தரவிட்டவாறு இரு வாரங்களில் 717 மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்றும் கடந்த 23-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து மே 23-ஆம் தேதி வரை 436 மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள கடைகளும் குறித்த காலத்திற்குள் மூடப்பட்டு விடும் என்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்திருந்தார்.

முதலமைச்சர் விஜய் அவர்கள் அளித்த இரு வாரக் காலக்கெடு மே 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. நேற்றுடன் 16 நாள்கள் முடிவடைந்து விட்டன. ஆனால், 717 மதுக்கடைகளும் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை. பல இடங்களில் இன்னும் மதுக்கடைகள் மூடப்படாமல் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வருகின்றன. இதை அனுமதிக்க முடியாது.

முதலமைச்சர் விஜய் அவர்கள் மூட ஆணையிட்ட 717 மதுக்கடைகளில் எத்தனை மதுக்கடைகள் கடந்த 26-ஆம் தேதிக்குள் மூடப்பட்டன என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். அவற்றில் இதுவரை மூடப்படாத மதுக்கடைகளை இன்றைக்குள் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக இப்போது மூடப்படும் 717 மதுக்கடைகளும் வேறு இடங்களில் திறக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com