வியட்நாம் படகு விபத்தில் தமிழர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது: அன்புமணி இரங்கல்

படகு விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
anbumani
Published on

வியட்நாமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலம் ஃபூ குவொக் தீவு. இப்பகுதியில் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற சுற்றுலா படகு நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் சிக்கி 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

வியட்நாம் படகு விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தொர் குடும்பத்தினருக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியுள்ளதாவது:

வியட்நாம் நாட்டின் ஹான் மே ரூட் ங்வோய் தீவில் இன்று மாலை நிகழ்ந்த மோசமான படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் ஹான் மே ரூட் ங்வோய் தீவுக்கு அருகில் பயணம் மேற்கொண்டிருந்த போது படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் 15 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 15 பேரில் 8 பேர் சென்னை, தருமபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உயிரிழந்த தமிழர்கள் உள்ளிட்ட அனைவரின் உடல்களையும் உடனடியாக மீட்டு, சொந்த ஊர்களுக்கு கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com