

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. 56 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வியை சந்தித்தனர்.
இதனிடையே, நேற்று கொளத்தூர் தொகுதிக்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் கூட்டணி கட்சி தலைவர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்திற்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பின் போது, வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.