

தமிழ்நாடு காங்கிரஸ் அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமாருக்கு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூலை.8) பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்.,
“தேர்தலுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணியில் இருந்தோம். தேர்தலுக்குப் பிறகு இப்போது முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் தொலைபேசியில் ஆதரவு கேட்டார். அதனால் காங்கிரஸ் கட்சி ஆதரவை அளித்தது.
மீண்டும் ஜோசப் விஜய் தொலைபேசியில் தலைவர் ராகுல்காந்தியிடம் பேசி அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றோம். இது காங்கிரஸ் கட்சிக்கு காலம் தந்த கொடை.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற விதியை யார் எழுதியது, எங்கே இது தயாரிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்தபோதும் கூட்டணி ஆட்சிக்கு இடம் கொடுக்கவில்லை.
இப்போது இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத நிலை உருவாகிவிட்டது. 1984ல் ஆசியஜோதி இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றது. அப்போது முதலமைச்சராக எம்.ஜி.ஆர். பதவியேற்றார். அப்போது காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கூட்டணி அமைச்சரவையைக் கேட்டது உண்டா?
1991 இல் ராஜீவ் காந்தி தமிழ்மண்ணில் சுட்டுக் கொல்லப்பட்டபோது காங்கிரஸ் கட்சிக்கு 63 இடம் கிடைத்தது. அப்போதும் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. 1996 இல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. அப்போது உண்மையான காங்கிரஸ்காரனாக இருப்பேன் என்று சொல்லிய மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்தி 36 இடங்கள் பெற்றாலும் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.
2006 இல் திமுக சிறுபான்மை அரசாக இருந்தபோதும் அப்போது 34 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. விக்கிரவாண்டி மாநாட்டில் கூட்டணி அமைச்சரவை என்று சொல்லியவர் தவெக தலைவர் ஜோசப் விஜய். இப்போதும் நாம் கேட்காமலேயே காங்கிரஸுக்கு அமைச்சரவையில் பங்கு கிடைத்துள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் விஜய்யிடம் சமர்ப்பித்து நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம். மேலும், காங்கிரஸ் சார்பில் ஒரு பிரதிநிதிகள் குழு அவரைச் சந்திக்க வரவேண்டும். உயர்க்கல்வித்துறையைப் பொறுத்தவரை உலக தரத்தில் ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்கும் சிந்தனையில் ஜோசப் விஜய் இருக்கிறார்.
இப்போது பீகார் மாநிலத்தில் நாளந்தா பல்கலைக் கழகம் இயங்குகிறது. காஞ்சிபுரத்தில்தான் அந்தப் பல்கலைக் கழகம் இருந்ததாக வரலாறு சொல்கிறது. அதனால் புதிய பல்கலைக் கழகம் அங்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.” என்றார் அமைச்சர் விஸ்வநாதன்.