தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக விமானத்தில் பறந்த 15 மாணவிகள்: முன்னாள் எம்.பி. ஏற்பாடு

வழக்கமாக இவ்வாறு சாதனைப் படைத்த மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் அல்லது ஏதாவது பரிசுப் பொருட்களை வழங்கி கவுரவிப்பார்கள்.
தூத்துக்குடியில் விமானத்துக்கு அருகில் மகிழ்ச்சி பெருக்குடன் நின்றுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவிகள்.
Published on

ஆகாயத்தில் பறந்தபோது விமானம் பார்ப்பதற்கு எவ்வளவு சிறியதாக தெரிந்தது. இப்ப பாரேன்... எவ்வளவு பெரிதாக உள்ளது. வாவ்... என்று விமானத்தை ஆச்சரியத்துடன் கண்கொட்டாமல் தூத்துக்குடி விமான நிலையத்தில் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த சீருடை அணிந்த மாணவிகள்.

விமானத்தில் அருகில் நின்று பார்ப்பது மட்டுமல்ல முதல்முறையாக விமானத்தில் பறக்கவும் போறோம் என்கிற உற்சாகத்தில் காணப்பட்ட அந்த மாணவிகள் அடுத்த சிறிது நேரத்தில் அந்த விமானத்தில் ஏறி சென்னைக்கு பயணத்தைத் தொடங்கினார்கள். இவர்கள் அனைவரும் முற்றிலும் நெல்லை மாவட்டத்தின் கிராமப் பகுதிகளின் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள். ஆனால் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் சாதித்தவர்கள், இவர்களுக்கு இந்த ஆச்சரியமான பரிசை வழங்கி உற்சாகப்படுத்தியவர், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சவுந்தரராஜன்.

வழக்கமாக இவ்வாறு சாதனைப் படைத்த மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் அல்லது ஏதாவது பரிசுப் பொருட்களை வழங்கி கவுரவிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்த விமானப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அவர் படித்த செட்டிக்குளம் அரசு பள்ளியில் 10 மற்றும் 12 வகுப்புகளில் முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்கள், மொழி வாரியாக பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள், மேலும் நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் என மொத்தம் 15 மாணவ-மாணவிகளை தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு துணையாக 3 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் நேற்று பிற்பகலில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார்கள். சென்னையில் தங்கி உள்ள அவர்களை இன்று (26-ந்தேதி) மகாபலிபுரம் மற்றும் எம்.ஜி.எம். பொழுதுபோக்கு இடம் ஆகியவற்றிற்கு அழைத்துச் சென்றனர். நாளை (27-ந்தேதி) அண்ணா பல்கலைக்கழகம், பிர்லா கோளரங்கம், அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்கிறார்கள். 3 நாட்களும் சென்னையை சுற்றிப் பார்த்துவிட்டு நாளை மறுநாள் (28-ந்தேதி) வந்தே பாரத் ரெயிலில் நெல்லை செல்கிறார்கள். இதற்கான முழு செலவையும் சவுந்தரராஜன் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் கூறும்போது, “கிராமப்புறங்களில் இருந்து கஷ்டப்பட்டு படிக்கும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து சாதிப்பதற்கு தூண்டும் வகையில், இந்த பயணத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளேன். இது மற்ற மாணவ- மாணவிகளுக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com