

வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு தடையின்றி பயணம் செய்ய வசதியாக, சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்) ஜெரோலின் லிஸ்பன் சிங் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வரும் 17 (வெள்ளிக்கிழமை) மற்றும் 18 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகளின் விவரம் பின்வருமாறு:-
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 395 பஸ்களும், 18-ந் தேதி (சனிக்கிழமை) 330 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17-ந் தேதி வெள்ளிக்கிழமை 120 பஸ்களும், 18-ந் தேதி சனிக்கிழமை 120 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரத்திலிருந்து திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 17 மற்றும் 18-ந் தேதிகளில் தலா 25 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 420 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் தங்களது பயணங்களை முன்னரே திட்டமிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.