

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கியமான கட்சிகள் அனைத்தும் இடம் பெற்று உள்ளன.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே இந்த கூட்டணி உறுதியானது. அதே போல் கூட்டணியில் இடம்பெற்று உள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையும் 28 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு கட்சியுடனும் கடுமையான இழுபறிக்கு பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டது. அதே நேரம் ம.தி.மு.க.வுக்கு 2 தொகுதிகள் குறைக்கப்பட்டன. 2 கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி குறைக்கப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு:-
காங்கிரஸ்-28, தே.மு.தி.க.-10, விடுதலை சிறுத்தைகள்-8, இந்திய கம்யூனிஸ்டு-5, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-5, ம.தி.மு.க.-4, மனிதநேய மக்கள் கட்சி-2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி-2, கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை, எஸ்.டி.பி.ஐ., மனிதநேய ஜன நாயக கட்சி, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன.
எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டாலும் தொகுதிகளை அடையாளம் காண்பதில் அடுத்த சிக்கல் ஏற்பட்டது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகள் இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
இதனை தொடர்ந்து, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் குறித்து மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவுடன் தே.மு.தி.க.வின் எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கிய 10 தொகுதிகள் எவை என்பதை அடையாளம் காண்பதில் இறுதி முடிவு எட்டப்பட்டது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே.சுதீஷ், எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டு தி.மு.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானதாக தெரிவித்தார்.
மேலும் தே.மு.தி.க.விற்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றார்.